செய்திகள்
சஞ்சு சாம்சன், ஸ்மித்

சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு

Published On 2020-09-22 21:26 IST   |   Update On 2020-09-22 21:26:00 IST
சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆட, ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் அம்பதி ராயுடுக்குப் பதிலாக ருத்து கெய்க்வார்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் உடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் களம் இறங்கியதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சாம் கர்ரன் வீசிய 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் சஞ்சு சாம்சன்.

தீபக் சாஹர் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்சரும், ஸ்மித் ஒரு பவுண்டரியும் விளாசினார். ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது.

அதன்பின் சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர் விளசினார். பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். பியூஷ் சாவ்லா இந்த ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

10-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசியது. இந்த ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்த 2 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சர்வசாதரணமாக 225 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் 12-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் ரன்அவுட் ஆனார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 134 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் ராஜஸ்தன் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகத்தில் தடைஏற்பட்டது.



சாவ்லா 13-வது ஓவரில் 3 ரன்களும், 15-வது ஓவரில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். லுங்கி நிகிடி வீசிய 16-வது ஓவரில் 12 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் 19-வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினார். ஸ்மித் 47 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 69 ரன்கள் அடித்தார்.

டெத் ஓவரான 17-வது ஓவரில் 7 ரன்களும், 18-வது ஓவரில் 4 ரன்களும், 19-வது ஓவரில் 9 ரன்களுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். ஜாஃப்ரா ஆர்சர் முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 30 ரன்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. ஜாஃப்ரா ஆர்சர் 8 பந்தில் 4 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும் சாஹர், நிகிடி, சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

Similar News