செய்திகள்
விக்கெட் வீழ்த்திய அஸ்வினை பாராட்டும் சக வீரர்கள்

மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

Published On 2020-09-20 18:15 GMT   |   Update On 2020-09-20 18:15 GMT
ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
துபாய்:

ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
 
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களை எடுத்து தத்தளித்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ரன் குவித்து அவுட்டானார்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. 

இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
Tags:    

Similar News