செய்திகள்
ஸ்டாய்னிஸ்

ஸ்டாய்னிஸ் அதிரடி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி

Published On 2020-09-20 16:00 GMT   |   Update On 2020-09-20 16:00 GMT
முகமது ஷமி மூன்று விக்கெட்டுக்கள் சாய்க்க, ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் ரன் ஏதும் அடிக்காத நிலையில் ரன்அவுட் ஆனார்.

அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையரை 7 ரன்னிலும், பிரித்வி ஷாவை 5 ரன்னிலும் வெளியேற்றினார் முகமது ஷமி. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்தை சிக்சருக்கு துரத்தினார். அணியின் ஸ்கோர் 13.6 ஓவரில் 86 ரன்னாக இருக்கும் போது ரிஷப் பண்ட் 31 ரன்னில் வெளியேறினார்.

அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.1 ஓவரில் 87 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்னிங்ஸ் ஓரளவிற்கு முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.



ஆனால், ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் 150-ஐ நெருங்கியது. 19-வது ஓவரில் மூன்று பவுண்டரிளும், கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்டினர். அத்துடன் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்து ரன்அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News