செய்திகள்
எம்எஸ் டோனி - ரோகித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம் - 2019 இறுதிப் போட்டி தோல்விக்கு மும்பையை பழி தீர்க்குமா சிஎஸ்கே

Published On 2020-09-18 13:39 GMT   |   Update On 2020-09-18 14:07 GMT
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பல தடைகளை தாண்டி நாளை (இன்று) தொடங்குகிறது. ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போது ஆரம்பித்திலேயே பட்டைய கிளப்ப வேண்டும் என நிகழ்ச்சியாளர்கள் விரும்புவார்கள். அதுபோலதான் ஐபிஎல் நிர்வாகம் விரும்ப அதற்கு ஏற்ப அமைந்ததுதான் ஐபிஎல் ‘எல் கிளாசிகோ’. 

‘எல் கிளாசிகோ’ என்றால் என்ன எனப் பார்க்கிறீர்களா?. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் லா லிகா கால்பந்து லீக்கில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டிதான் எல் கிளாசிகோ. உலகம் முழுவதும் இந்த போட்டிக்கென தனி ரசிகர்கள் பாட்டாளமே உண்டு.

அது போலத்தான் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி. ரசிகர்கள் போட்டி நடக்கும் நேரத்தில் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தை ரசிக்க தொடங்கி விடுவார்கள்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தது குறித்து ஆராய்வோம்.

இரண்டு அணிகளும் நேருக்குநேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. மற்ற அணிகளை வந்து பார் என்று மார்தட்டும் சென்னை அணியால் மும்பை அணிக்கெதிராக மட்டும் அடிபணிந்து விடுகிறது. இதுவரை 28 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் 17  முறை மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. 11 முறைதான் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 2013, 2015, 2019 இறுதிப் போட்டிளும் அடங்கும்.

கடந்த சீசனில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியுள்ளது. இந்த நான்கிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து 4-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. குவாலிபையர் 1-ல் குறைந்த ரன்கள் அடித்து, மும்பையை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

ஒட்டுமொத்த தோல்விக்கும் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழிதீர்க்க துடிக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதார் ஜாதவ், ஜடேஜா, எம்.எஸ். டோனி, டு பிளிஸ்சிஸ், வெயின் பிராவோ போன்றோர் பேட்டிங்கில் அசத்தக்கூடியர்.

கடந்த சீசனில் ஷேன் வாட்சன் தொடக்கத்தில் சொதப்பினார். போட்டிகள் செல்ல செல்ல அதிரடியை வெளிப்படுத்தினார். அம்பதி ராயுடுக்கு 2018 சீசன் போன்று கடந்த சீசன் அமையவில்லை. முதல் நான்கு போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சிறப்பான விளையாடததால் மிடில் ஆர்டர் வரிசைக்கு இறக்கப்பட்டார். அதன்பின் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஜோடி அணியை வெற்றிகரமாக அழைத்துச் சென்றது.

சிறப்பான தொடக்கம் கொடுக்கப்பட்டால் தல டோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று விடுவார். இதனால் முதல் மூன்று பேர் குறிப்பிடத்தகுந்த ரன்கள் அடித்தால் சென்னை அணிக்கு பிரச்சினை இருக்காது.

சின்ன தல ரெய்னா இல்லாதது சென்னைக்கு மிப்பெரிய இழப்பாகும். சுழற்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த ரெய்னா இடத்தை நிரப்புவது யார்? என்பதை பொறுத்துதான் மிடில் ஆர்டர் வலுப்பெறும்.

வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஹசில்வுட், சாம் கர்ரன், வெயின் பிராவோ, கேம். எம். ஆசிஃப் போன்ற வீரர்களை கொண்டுள்ளது. தீபக் சாஹர் தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் சிறப்பாக பந்து வீசக்கூடியர். கடந்த சீசனில் 17 போட்டிகளில் 22 விக்கெட் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். வெயின் பிராவோ மிடில் ஓவர்களை பார்த்துக் கொள்வார். இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக அமைந்து விட்டால் வேகப்பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருக்காது.

சுழற்பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் அசத்திய ஆர். சாய் கிஷோர் உள்ளனர். ஹர்பஜன் சிங் இல்லாதால் இம்ரான் தாஹிர்தான் சுழற்பந்து வீச்சு யுனிட்டை வழிநடத்திச் செல்வார். கடந்த சீசனில் இம்ரானி தாஹிர் 17 போட்டிகளில் 26 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார். ஒரு ஓவருக்கு 6.69 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இம்ரான் தாஹிர், கர்ண் சர்மா, சாய் கிஷோர் ஆகிய மூன்று பேரில் இரண்டு பேருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு. சுரேஷ் ரெய்னா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவார். தற்போது ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு பந்து வீச்சிலும் சற்று பலம் குறைந்து காணப்படும்.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரராக குயின்டன் டி காக், ரோகித் சர்மா ஆகியோரை களம் இறக்க இருக்கிறது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த கிறிஸ் லின்னும் வந்து சேர்ந்துள்ளார். இந்த மூன்று பேருமே மேட்ச் வின்னர். போட்டி நடக்கும் அன்றைய தினம் அவர்களுடையதாக இருந்தால் தனி நபராக அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று விடுவார்கள். இதனால் தொடக்க வீரர்களுக்கு பிரச்சினை இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் எப்போதுமே சிறப்பாக விளையாடியது கிடையாது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது பாதித்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த இரண்டு மோசமான சாதனைகளையும் தவிர்க்க நினைக்கும்.

மிடில் ஆர்டர் வரிசையில் சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ஆகியோர் சிறப்பாக விளையாடும் போட்டியில் வெற்றியை தேடிக்கொடுத்து விடுவார்கள்.

சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், குருணால் பாண்ட்யா ஆகியோர் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். பெரும்பாலும் இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களம் இறங்க வாய்ப்புள்ளது.

வேகப்பந்து வீச்சில் பும்ரா, மிட்செல் கிளேனகன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, டிரென்ட் போல்ட், நாதன் கவுல்டர்-நைல் போன்றோர் உள்ளனர். பும்ரா அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். மலிங்கா இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு என்பதில் எந்த சந்தேகம் இல்லை. மலிங்கா இடத்தை டிரென்ட் போல்ட் நிரப்புவார் என மும்பை இந்தியன்ஸ் நம்புகிறது.

மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags:    

Similar News