செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வது கடினம் அல்ல- கவாஸ்கர்
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வது கடினம் அல்ல என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 லீக் தொடர் நாளைமறுநாள் (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வது கடினமாக இருக்காது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘நீங்கள் எந்த அணி சாம்பியன் கோப்பையை வெல்லும் என்று தேர்வு செய்தால், உறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் எனச் சொல்லலாம். ஏனென்றால், டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரைக்கும் ஒரு ஓவரில் சூழ்நிலை மாறும்.
ஆனால், ஏற்கனவே இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளதால் நெருக்கடியை சமாளிக்கும் திறமையை பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். நாக்அவுட் மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதை விட லீக் போட்டிகளில் விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இதனால் கடினமான சூழ்நிலையை எப்படி கடக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் இந்த வருடமும் ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வது அவர்களுக்கு கடினமாக இருக்காது என நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.