செய்திகள்
துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்: அமீரக கிரிக்கெட் போர்டு
ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும்.
அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் கூறுகையில் ‘‘அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். எந்தவித தனிமைப்படுத்துதல் இல்லாமல் அணி வீரர்கள் மூன்று இடத்திற்கும் சென்ற வர அதிகாரிகளால் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் நெறிமுறைப்படி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய ஓட்டல்களில் இருந்தால் போட்டிக்கு சென்று வர எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.