செய்திகள்
ஒல்லி ராபின்சன்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன்

Published On 2020-08-12 14:37 GMT   |   Update On 2020-08-12 14:37 GMT
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாளை தொடங்கும் நிலையில், பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து களம் இறங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

முதல்வரிசை பேட்டிங்கில் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி, ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோர் இருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த போட்டியில் கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் இல்லை என்றால் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கும். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்கள். முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவரட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் 90 ரன்களுக்கு மேல் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் நெருக்கடிக்குள்ளாகி உள்ளார். இந்த போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவார்.

பென் ஸ்டோக்ஸ் சொந்த விசயம் காரணமாக இரண்டு டெஸ்டிலும் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்குப் பதிலாக ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரைக்கும் பந்து வீச்சில் முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் யாசர் ஷா உள்ளார். பேட்டிங்கில் ஷான் மசூத் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். ஆனால் 2-வது இன்னிங்சில் ஏமாற்றம் அளித்தார். கேப்டன் அசார் அலி இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினார். இந்த டெஸ்டிலும் சரியாக விளையாட வில்லை என்றால் கேப்டன் பதவியை தக்க வைப்பது கடினமாக இருக்கும். பாபர் அசாம் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் ஏமாற்றம் அளித்தார். ஒரு அணியாக சேர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 14 வீரர்கள் விவரம்:-

1. ஜோ ரூட் (கேப்டன்), 2. ஜேம்ஸ் ஆண்டரசன், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4, டொமினிச் பெஸ், 5. ஸ்டூவர்ட் பிராட், 6. ரோரி பேர்ன்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. சாம் கர்ரன், 10. ஒல்லி போப், 11. ஒல்லி ராபின்சன், 12. டாம் சிப்லி, 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க் வுட்.
Tags:    

Similar News