செய்திகள்
வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற பட்லர்-வோக்ஸ் ஜோடி

வோக்ஸ், பட்லர் அபார ஆட்டம் - முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2020-08-08 18:32 GMT   |   Update On 2020-08-08 18:32 GMT
கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
மான்செஸ்டர்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326 ரன்கள் குவித்தது. அதன்பின், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. யாசீர் ஷா 4 விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து 219 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

முதல் இன்னிங்சில் சதமடித்த ஷான் மசூத் டக்-அவுட்டிலும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து திணறியது. யாசீர் ஷா 12 ரன்களுடனும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யாசீர் ஷா 33 ரன்கள் அடித்தார். ஷாஹீன் ஷா அப்ரிடி (2), நசீம் ஷா (4) ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 107 ரன்கள் அதிகம் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 276 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்கத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் இங்கிலாந்து அணி 117 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 6 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்கள் குவித்தது. பட்லர் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து ஆடிய வோக்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News