செய்திகள்
அவுட் ஆன பென் ஸ்டோக்ஸ்

ஸ்டெம்பை தெறிக்கவிட்ட முகமது அப்பாஸ் - திகைத்துப்போன பென் ஸ்டோக்ஸ்

Published On 2020-08-07 00:03 GMT   |   Update On 2020-08-07 00:03 GMT
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாசின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
மான்செஸ்டர்:

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் மசூத், பாபர் அசாம் மற்றும் சதாப்கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய மசூத் அதிகபட்சமாக 156 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர்.

பின்னர் இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார்.  சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டங்களில் எப்போதும் சிறப்பாக விளையாடும் ஸ்டோக்ஸ் இப்போட்டியிலும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

6 பந்துகளை சந்தித்திருந்த ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலேயே இருந்தார். அவருக்கு பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் பந்து வீசினார். 7-வது பந்தை சந்தித்த ஸ்டோக்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அப்பாஸ் லேக் சைடில் வீசிய பந்தை ஸ்ரேட் ரிரைவாக அடிக்க ஸ்டோக்ஸ் முற்பட்டார். இதற்காக தனது பேட்டை ஸ்ரேட் ரிடைவ் கோணத்தில் சுழற்றினார். ஆனால், அப்பாஸ் வீசிய பந்து லேக் சைடில் இருந்து ஸ்விங்காகி பேட்டில் படாமல் லாவகமாக ஆப் ஸ்டெம்பை தெரிக்கவிட்டது.

129 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்து பேட்டில் படாமல் ஸ்டெம்பை தெரிக்கவிட்டதை கண்ட ஸ்டோக்ஸ் சில வினாடிகள் திகைத்து நின்றார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார். இதனால் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

அப்பாஸ் வீசிய பந்து ஸ்டோக்கின் பேட்டை இலாவகமாக கடந்து ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 50 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர் ரன் எதுவும் எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ்(0) தனது விக்கெட்டை பறிகொடுத்தது இதுவே முதல்முறையாகும்.   

  

இதற்கிடையில், 2 ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், அந்த அணி பாகிஸ்தானை விட 234 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

Tags:    

Similar News