செய்திகள்
நடுவரிடம் அவுட் கோரும் பாகிஸ்தான் வீரர்கள்

மான்செஸ்டர் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 92 ரன்கள் - திணறும் இங்கிலாந்து

Published On 2020-08-06 23:13 GMT   |   Update On 2020-08-06 23:13 GMT
மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 92 ரன்களை எடுத்துள்ளது.
மான்செஸ்டர்: 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். 
இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கீட்டதால் முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் 69 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆசாத் ஷபிக் 7 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் ஷான் மசூத் 156 பந்தில் அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கிச் சென்றார். அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் பக்கபலமாக இருக்க 251 பந்துகளை சந்தித்து ஷான் மசூத் சதம் அடித்தார்.

சதாப்கான் 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த யாசிர் ஷா 5 ரன்னிலும், முகமது அப்பாஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 
ஷான் மசூத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 156 ரன்கள் (319) அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 109.3 ஓவரில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆண்டர்சன் மற்றும் பெஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோய் பொர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர்.

ரோய் 4 ரன்னிலும், சிப்லி 8 ரன்னிலும் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். கேப்டன் ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாசிர் ஷா பந்துவீச்சில் அவுட் ஆனார்.  

அடுத்து களமிறங்கிய போப் மற்றும் பட்லர் ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் போப் 46 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இதனால் பாகிஸ்தான் அணியை விட 234 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி சற்று திணறிவருகிறது. 

பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் இளம் வீரர் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 
Tags:    

Similar News