செய்திகள்
ஹாமில்டன்

ஹங்கேரி பார்முலா 1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி- ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்

Published On 2020-07-20 03:45 GMT   |   Update On 2020-07-20 03:45 GMT
ஹங்கேரி பார்முலா 1 காரபந்தயத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் ஹாமில்டர், ஷூமாக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.
பார்முலா 1 கார்பந்தயத்தின் 3-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் பிரி அங்குள்ள மொக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.63 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

1 மணி 36 நிமிடம் 12.473 வினாடிகளில் இலக்கை முதலாவதாக கடந்து 26 புள்ளிகளை அவர் தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டனின் 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 8.7 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் (மெர்சிடஸ் அணி) பிடித்தனர். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஹாமில்டன் வெற்றியை ருசிப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2007, 2009, 2012, 2013, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்பிரி பந்தயத்தில் அதிக வெற்றி பெற்றவரான ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் (பிரெஞ்ச் கிராண்ட்பிரியில் 8 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.

4-வது சுற்று போட்டி ஆகஸ்டு 2-ந்தேதி இங்கிலாந்தில் நடக்கிறது.
Tags:    

Similar News