செய்திகள்
பந்தை விளாசும் பட்லர்

’டிரா’வை நோக்கி செல்லும் மான்செஸ்டர் டெஸ்ட்

Published On 2020-07-19 18:58 GMT   |   Update On 2020-07-19 18:58 GMT
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் ’டிரா’வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மான்செஸ்டர்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.  2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்டனர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 எடுத்தது.

இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 

3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ்
அணியை விட 219 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. 

ஆனால், டெஸ்ட் போட்டியில் நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் இப்போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News