செய்திகள்
தரம்சாலா கிரிக்கெட் மைதானம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிக்கு 3 இடங்கள் தேர்வு

Published On 2020-07-18 06:07 GMT   |   Update On 2020-07-18 06:07 GMT
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தரம்சாலா உள்பட மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று காணொலி மூலம் நடந்தது. 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டி, எதிர்கால போட்டி அட்டவணை மற்றும் உள்ளூர் போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல்.யை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
ஐக்கிய அரபு எமிரேட்சில் மருத்துவ வசதி உள்பட பல்வேறு வசதிகள் மற்றும் ஏற்கனவே போட்டி நடத்திய அனுபவம் ஆகியவை காரணமாக, அங்கு போட்டியை நடத்த பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். 


ஐ.பி.எல்.போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் தொடக்கம் வரை 5 அல்லது 6 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் இலக்கு வைத்துள்ளது.
 உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே, ஐ.பி.எல். அட்டவணையை தயாரிக்க முடியும்.

ஏற்கனவே ஐ.பி.எல். போட்டி 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்துள்ளது. 
இந்தியாவில் தேர்தல் நடந்ததால், அங்கு நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 மைதானங்கள் உள்ளன.

இலங்கையில் பொது தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு ஐ.பி.எல்.லை நடத்துவது சரியாக இருக்காது என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் ஐ.பி.எல்லின் ஆட்சிமன்ற கூட்டத்தில்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதேபோல இந்திய வீரர்களின் பயிற்சி முகாமுக்கு 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. துபாய், தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 3 இடங்கள் இந்திய வீரர்களின் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 இதில் ஏதாவது ஒரு இடத்தில் பயிற்சி முகாம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News