செய்திகள்
சவுரவ் கங்குலி

3 மாதம் பயிற்சிதான்: இந்திய அணிக்காக களம் இறங்கி ரன்கள் குவிக்க முடியும்- சவுரவ் கங்குலி

Published On 2020-07-17 16:12 IST   |   Update On 2020-07-17 16:12:00 IST
மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்து சில ரஞ்சி போட்டிகளில் விளையாடினால், இந்திய அணிக்காக விளையாடக்கூடிய தகுதியை பெற்றுவிடுவேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஓய்வு பெற்ற கடைசிக்கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது ‘‘எனக்கு இன்னும் இரண்டு தொடர்கள் ஒருநாள் போட்டியில் கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான ரன்கள் அடித்திருப்பேன். நாக்பூர் போட்டியில் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால், அடுத்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் அதிக ரன்கள் அடித்திருப்பேன். 

உண்மையிலேயே, தற்போது எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டால், அதன்பின் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக என்னால் ரன்கள் அடிக்க முடியும். ஆறுமாதம் கூட வேண்டாம். மூன்று மாதங்கள் கொடுத்தால் போதும். அப்போது கூட ரன்கள் அடிக்க முடியும்.

நீங்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போகலாம், ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைக்க முடியும்?’’ என்றார்.

மேலும் 2007-08 சிறப்பாக ரன்கள் அடித்த போதிலும் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ‘‘அதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த வருடத்தில் நான் அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும்  நீக்கப்பட்டேன். நன்றாக விளையாடிய போதிலும் நீக்கப்பட்டால், அப்புறம் எப்படி நிரூபிப்பது, யாரிடம் நிரூபிப்பது, என்ற விஷயம் எனக்கும் நிகழ்ந்து கொண்டே இருந்தது’’ என்றார்.

113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்களும், 311 ஒருநாள் போட்டிகளில்11,363 ரன்களும் அடித்துள்ளார். கிரேக் சேப்பல் உடனான மோதலால் 2006-ல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் மீண்டும் அணிக்கு திரும்பி 2008 வரை விளையாடினார்.

Similar News