செய்திகள்
ஐ.பி.எல். போட்டியை நடத்த தன்னைத்தானே தயார் நிலையில் வைத்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்
ஐபிஎல் கிரிக்கெட் லீக்கை எப்போது வேண்டுமென்றாலும் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ச்சியாக கூறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20- உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் லீக்கை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது.
கடந்த மாதம் இறுதியில் நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்திருந்ததாக செய்தி வெளியானது. அப்போது, அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லை என்று நியூசிலாந்து முற்றிப்புள்ளி வைத்தது.
அதன்பின் பிசிசிஐ தலைவர், இந்தியாவைத் தவிர்த்து வெளியில் போட்டியை நடத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தாலும் அது இறுதி கட்ட முயற்றியாகத்தான் அது இருக்கும் என்றார்.
இதனால் ஐபிஎல் லீக் நடந்தால் இந்தியாவில்தான் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் போட்டி நடந்தாலும் பரவாயில்லை. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், கடைசி நேரத்தில் அழைக்கலாம் என்பதால் நாங்கள் தயார் நிலையிலேயே இருக்கிறோம் என்று துபாய் விளையாட்டு சிட்டியின் கிரிக்கெட் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சல்மான் ஹனிஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் ஹனிஃப் கூறுகையில் ‘‘துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஐசிசி அகாடமி டி20 லீக் போட்டிக்கு தயாராக இருப்பதற்காக சாத்தியக்கூறு உள்ள மைதானம். இங்கு 9 ஆடுகளங்கள் உள்ளன. குறுகிய நாட்களுக்குள் அதிகப்படியாக போட்டிகளை நடத்திட முடியும். நாங்கள் எந்த போட்டிக்கான அட்டவணையையும் தயார் செய்யாததால் ஆடுகளங்கள் புதிதாக இருக்கின்றன’’ என்றார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2014-ல் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது பெரும்பாலான ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.