செய்திகள்
ஜஸ்டின் லாங்கர்

ஐபிஎல் தொடரில் விளையாட நட்சத்திர வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும்: ஆஸி. பயிற்சியாளர்

Published On 2020-07-09 10:34 GMT   |   Update On 2020-07-09 10:34 GMT
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று விளையாடுவது உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியம் என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் நடைபெறாமல் உள்ளது. 117 நாட்களுக்குப்பின் இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் மோதுகின்றன.

அடுத்த மாதம் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர்கள் நடைபெற இருக்கின்றன. செப்டம்பர் மாதம் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் நடைபெற இருக்கிறது.

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. உலக கோப்பையுடன் ஆஸ்திரேலியா அணி மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்க இருந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலக கோப்பையை நடத்த சாத்தியம் இல்லை என்று தெரிவித்து விட்டது.

இதனால் ஆஸ்திரேலியா இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா கட்டாயம் இங்கிலாந்திற்கு செப்டம்பர் மாதம் செல்ல வேண்டும். இது உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானது. அதேபோல் நட்சத்திர வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் இங்கிலாந்து சென்று விளையாடுவோம் என்று நினைக்கிறேன். அதில் ஏராளமான சவால்கள் உள்ளன. ஆனால், வாய்ப்பு இருந்தால் மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை தேட வேண்டும். இங்கிலாந்துக்கு செல்வது கிரிக்கெட் உலகிற்கு ஆரோக்கியமானது. அதேபோல் இந்தியா ஆஸ்திரேலியா வந்து விளையாட விரும்புகிறோம்.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்புவது நல்லெண்ண சைகையாக இருக்கும். அது இந்தியா ஆஸ்திரேலியா வரும் தொடரை மேலும் உறுதிப்படுத்தும்.

ஐபிஎல் தொடரை பற்றி நான் வெளிப்படையாக பேசியாக வேண்டும். தற்போது ஐபிஎல் திட்டம் குறித்து ஒவ்வொரு நாளும் மாறுபட்ட கருத்துக்களை கேட்டு வருகிறேன். நாம் எப்படி அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். அதனால் உள்ளூர் சீசன் பாதிக்கப்படுமா?, வீரர்களை எப்படி பாதிக்கும், தனிமைப்படுத்துதல் விவகாரம் குறித்து ஒரு தெளிவு கிடைக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News