செய்திகள்
கேட்ச் பயிற்சியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

Published On 2020-07-08 02:42 GMT   |   Update On 2020-07-08 02:42 GMT
கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
சவுதம்டன்:

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கொரோனாவின் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 2-வது உலக போருக்கு பின்னர் அதாவது 1946-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலக்கட்டமாக இது அமைந்துள்ளது.

இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பல கட்ட கொரோனா பரிசோதனை என்று மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

இதனால் வெறிச்சோடிய மைதானத்தில் வித்தியாசமான சூழலில் வீரர்கள் விளையாடப்போகிறார்கள். அது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது. பந்தை ஒரு பக்கம் தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்காவிட்டால் ‘ஸ்விங்’ செய்வது கடினம். இது பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எச்சிலுக்கு தடை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜோ ரூட் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையில் பலவீனத்தை ஏற்படுத்தும். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரைத் தான் அந்த அணி மலைப்போல் நம்பி உள்ளது. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிரட்டுவார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும்.

இங்கிலாந்தின் 81-வது டெஸ்ட் கேப்டனாக அடியெடுத்து வைக்கும் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறுகையில், ‘உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யும்படி ஜோ ரூட் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் எப்போதும் மற்ற வீரர்களிடம் ஆலோசனை கேட்பார். அதை நானும் பின்பற்றுவேன். தேவைப்பட்டால் அவரிடமும் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பேன். 6 அல்லது 7 பந்து வீச்சாளர்கள் அணிக்கு தேர்வு செய்வதற்குரிய நிலையில் உள்ளனர். யாரை சேர்ப்பது, யாரை விடுவது என்பது தலைவலி தான். ஆனால் ஒரு அணியாக நாங்கள் சிறந்த நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது’ என்று குறிப்பிட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மயர் ஆகியோர் கொரோனா பீதியால் விலகியது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். இருப்பினும் பேட்டிங்கில் ஷாய் ஹோப், ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், பிராத்வெய்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு வலுவுடன் காணப்படுகிறது. அதனால் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘கெமார் ரோச், ஹோல்டர், கேப்ரியல் ஆகியோர் எங்களது முன்னணி பவுலர்கள் என்பதை அறிவோம். ஆனால் அல்ஜாரி ஜோசப்பும் நன்றாக பந்து வீசுகிறார். இந்த தொடரில் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். எங்களது பேட்டிங் குறித்து நான் கவலைப்படவில்லை. பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைத்து வருகிறார்கள். இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறையிலும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்பதை மனதில் கொண்டுள்ளோம். எல்லோரும் சரியான மனநிலையுடன் தொடரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 157 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49-ல் இங்கிலாந்தும், 57-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 51 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 32 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜாக் கிராவ்லி, ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், சோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் அல்லது மார்க்வுட், டாம் பெஸ்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரஹீம் கார்ன்வால் அல்லது ஜெர்மைன் பிளாக்வுட், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் 2 நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News