செய்திகள்
மிகப்பெரிய மைதானம் கட்டுகிறது ராஜஸ்தான்

75 ஆயிரம் இருக்கைகள் கொண்ட உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுகிறது ராஜஸ்தான்

Published On 2020-07-04 10:49 GMT   |   Update On 2020-07-04 10:49 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 75 ஆயிரம் ரசிகர்கள் உட்காரும் வகையில் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட இருக்கிறது.
குஜராத் மாநிலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மொதாரா கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1.02 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மெல்போர்ன் மைதானம் உள்ளது.

இந்நிலையில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. வேலை தொடங்குவதில் இருந்து இரண்டு வருடத்திற்குள் மைதானம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பயிற்சி மைதானங்கள் அமைக்கப்படும். இரண்டையும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரும் வகையில் பத்திரிகையாளர்கள் அறையும் கட்டப்பட இருக்கிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திர சர்மா கூறுகையில் ‘‘மைதானத்தில் உள்விளைாட்டு போட்டிகள், விளையாட்டு பயிற்சி அகாடமி, கிளப் ஹவுஸ் மற்று் 4000 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்படும்.

90 கோடி ரூபாய் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் செலவழிக்கும். 100 கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் கேட்க இருக்கிறோம். 100 கோடி ரூபாய் கடன் வாங்க இருக்கிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News