செய்திகள்
கேப்ரியல், சாம் கர்ரன்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல் சேர்ப்பு: சாம் கர்ரனுக்கு கொரோனா தொற்று இல்லை

Published On 2020-07-04 09:58 GMT   |   Update On 2020-07-04 09:58 GMT
உடற்தகுதி பெற்றதால் இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம்தேதி டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீரர் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். 32 வயதான அவர் கணுக்காலில் ஆபரேஷன் செய்து கொண்டார். உடல்தகுதியை நிரூபித்து பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் தேர்வாகியுள்ளார்.

கேப்ரியல் 45 டெஸ்டில் விளையாடி 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் எந்த டெஸ்டிலும் ஆடவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகிய 3  பேரும் கொரோனாவுக்கு பயந்து இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டனர்.

சாம் கர்ரனுக்கு கொரோனா இல்லை

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை தனிமைப்படுத்தியது. அவருக்கு கொரோனா பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று  இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் முதல் டெஸ்டில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் வீரர்கள் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் என 702  பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News