செய்திகள்
ஐசிசி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தலைவிதி இன்று தெரியுமா? - ஐ.சி.சி. மீண்டும் ஆலோசனை

Published On 2020-06-10 00:49 GMT   |   Update On 2020-06-10 00:49 GMT
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுமா என்பது குறித்து ஐ.சி.சி. மீண்டும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக இந்த போட்டியை திட்டமிட்டபடி அங்கு நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டு இந்தப் போட்டியை நடத்த விரும்புகிறது. ஆனால் 2021-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருக்கிறது.

எனவே, இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிப்போனால் இந்த பிரச்சினை சரியாகி விடும். ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமாலிடம் கேட்டபோது, ‘முதலில் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து ஐ.சி.சி. முறைப்படி அறிவிக்கட்டும். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விஷயத்தில் தொடர்ந்து இழுத்தடிக்காமல் விரைவில் தெளிவான முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அடுத்த கட்ட திட்டமிடலில் கவனம் செலுத்த முடியும்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News