செய்திகள்
இர்பான் பதான், பார்தீவ் பட்டேல், டேரன் சமி

ஐ.பி.எல். போட்டியில் இனவெறி இல்லை: இர்பான் பதான், பார்தீவ் பட்டேல் பதில்

Published On 2020-06-09 10:22 GMT   |   Update On 2020-06-09 10:22 GMT
இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின்போது இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடினேன். அப்போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் 'கலு' என்று அழைப்பார்கள்.

கருப்பினத்தவர்களை கிண்டல் செய்யும் வார்த்தை அது என்று அறிந்ததும் கோபம் வருகிறது“ என்று தெரிவித்தார்.

ஆனால் டேரன் சமி தன்னை 'கலு' என்று கேலி செய்தவர்கள் சகவீரர்களா? அல்லது ரசிகர்களா?, எப்போது நடந்தது என்ற விவரங்கள் எதையும் பதிவு செய்யவில்லை.

டேரன் சமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவருடன் ஐதராபாத் அணியில் ஆடிய முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், பார்தீவ் பட்டேல் பதில் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை அறிந்து இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

பார்தீவ் பட்டேல் கூறும் போது "அந்த (கேவலமான) சொற்களை யாரும் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

இர்பான் பதான் கூறும்போது "2014-ம் ஆண்டில் டேரன் சமியுடன் இருந்தேன். இனவெறி தாக்குதல் உண்மையிலேயே நடந்து இருந்தால் இந்த விஷயம் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு இருக்கும். எனவே பெரிய விஷயங்கள் எதுவும் விவாதிக்கப்படாததால் இது போன்ற விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது" என்றார்.

மற்றொரு வீரரான வேணுகோபால் ராவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
Tags:    

Similar News