செய்திகள்
சச்சின் தெண்டுல்கர் - கம்பீர் - விராட் கோலி

சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கரா? கோலியா? கம்பீர் பதில்

Published On 2020-05-22 04:44 GMT   |   Update On 2020-05-22 04:44 GMT
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த பதில் வருமாறு:-

கோலியை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வேன். ஏனெனில் தெண்டுல்கர் விளையாடிய காலத்தில் விதிமுறைகள் வேறு மாதிரி இருந்தது. ஒரு வெள்ளைநிற பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 4 பீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர்.

விராட்கோலி பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன. இரண்டு முனையிலும் புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து பழசாகி ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. விரல்களை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலர்களுக்கு ஏற்ற சூழல் இல்லை. 50 ஓவர்களிலும் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிப்பு மேலும் சுலபமாகி விடுகிறது. தெண்டுல்கர் விளையாடிய காலத்தை பாருங்கள். வெவ்வேறு விதிமுறைகள் இருந்தன. 230 முதல் 240 ரன்கள் எடுத்தாலே அப்போது வெற்றிக்குரிய இலக்காக இருந்தது. நீண்ட காலம் விளையாடியதற்காகவும், விதிமுறைகள் அடிப்படையிலும் தெண்டுல்கரை தேர்வு செய்கிறேன்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 7 சதங்களே தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News