செய்திகள்
ரசாயன வாயு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள்

ரசாயன வாயு கசிவால் 13 பேர் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விராட் கோலி, சாய்னா நேவால் இரங்கல்

Published On 2020-05-07 09:42 GMT   |   Update On 2020-05-07 09:42 GMT
விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விராட் கோலி, சாய்னா நேவால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது. அதிக அழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல மீட்டர் தொலைவுக்கு பரவியது. காற்றில் கலந்த விஷ வாயுவால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவித்தனர்.

சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி விழுந்தனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்படைந்த ஒவ்வொருவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது மிகவும் வலியை ஏற்படுத்தக்கூடிய பேரழிவு. பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கடவுள் துணிச்சலை கொடுப்பதற்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிவி சிந்து, சானியா மிர்சா, முகமது கைப், ஷிகர் தவான் போன்றோரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News