செய்திகள்
கோலி

ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்துவோம்- விராட்கோலி உறுதி

Published On 2020-04-26 07:14 GMT   |   Update On 2020-04-26 08:03 GMT
ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான் நமது கனவு என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை வேறு எந்த அணிக்கும் மாறாமல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்காக விளையாடி வருபவர், இந்திய கேப்டன் விராட் கோலி. மூன்று முறை இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் ஏனோ அந்த அணிக்கு ஐ.பி.எல். மகுடம் எட்டாக்கனியாகவே இருக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி 2016-ம் ஆண்டு சீசனில் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தென்ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் 2011-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார். அவரும், கோலியும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

அப்போது விராட் கோலி அவரிடம், பெங்களூரு அணியுடனான 12 ஆண்டு கால பயணம் வியப்புக்குரியது. நம்ப முடியாத ஒன்று. நீங்கள் (டிவில்லியர்ஸ்) 9 ஆண்டுகள் எங்களுடன் இருக்கிறீர்கள். நாம் உள்பட மற்ற வீரர்கள் அனைவரின் லட்சியம் ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான். மூன்று முறை நெருங்கி வந்து தவற விட்டிருக்கிறோம். ஒருங்கிணைந்து அதை கைப்பற்றுவதுதான் நமது கனவு.

ஐ.பி.எல். பயணத்தை நான் திரும்பி பார்ப்பது உண்டு. பெங்களூரு அணியை விட்டு வெளியேறும் சூழல் ஒரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. அவர்கள் (பெங்களூரு அணி நிர்வாகம்) என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் வைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன். ஒரு போதும் இந்த அணியை விட்டு விலகமாட்டேன். எந்த சூழ்நிலையிலும் வேறு அணிக்காக விளையாட வாய்ப்பில்லை என்றார்.

இதே கருத்தை ஆமோதித்த டிவில்லியர்ஸ் கூறும்போது, ‘நானும் பெங்களூரு அணியை விட்டு ஒரு போதும் விலக விரும்புவதில்லை. ஆனால் தொடர்ந்து ரன்கள் குவித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்பதை அறிவேன். இந்த போட்டியின் மூலம் கிடைத்துள்ள நட்புறவு மறக்க முடியாது. இதேபோல் ரசிகர்கள் பட்டாளமும், அவர்களின் உற்சாக கரவொலியும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய விஷயங்களை இழக்க விரும்பவில்லை. பெங்களூரு அணியில் தொடர்ந்து நீடிப்பேன். அது எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் நடக்கும் என்று நம்புகிறேன். என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்’ என்றார்.

இருவரும் இணைந்து தாங்கள் விளையாடிய காலத்தில் சிறந்த இந்திய, தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து ஆடும் லெவன் அணியை அறிவித்தனர். அந்த கனவு அணியில் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், காலிஸ், யுவராஜ்சிங், டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ஸ்டெயின், ஜஸ்பிரித் பும்ரா, ரபடா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனை விராட் கோலி தேர்வு செய்தார்.
Tags:    

Similar News