செய்திகள்
ரோகித் சர்மா

2 உலக கோப்பை போட்டியில் மகுடம் சூட வேண்டும் - ரோகித் சர்மா விருப்பம்

Published On 2020-04-25 06:13 GMT   |   Update On 2020-04-25 06:13 GMT
அடுத்த 3 உலக கோப்பை போட்டிகளில் இரண்டிலாவது மகுடம் சூட வேண்டும் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நடத்திய உரையாடலின் போது கூறியதாவது:-

அடுத்து 3 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை, அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேற உள்ள 50 ஓவர் உலக கோப்பை) நடைபெற இருக்கின்றன. இந்த 3 உலக கோப்பை போட்டிகளில் குறைந்தபட்சம் 2 உலக கோப்பை போட்டியிலாவது இந்திய அணி வெற்றி வாகை சூட வேண்டும். அது தான் எனது தனிப்பட்ட நோக்கமாகும்.

2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்தில் விக்கெட்டு களை இழக்காமல் இருந்து இருந்தால், நாம் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். அந்த முதல் 10 ஓவர்கள் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்தது. நமது அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு மிகவும் நெருக்கடியான விஷயமாகும்.

வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். உங்களுக்கும் (ஹர்பஜன்சிங்), யுவராஜ்சிங்குக்கும், சவுரவ் கங்குலி எப்படி ஆதரவாக இருந்தார். அதனை பயன்படுத்தி கொண்டு நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதேபோல் நாங்களும் செயல்பட வேண்டும். தற்போது யாருக்கெல்லாம் ஆதரவு அளிக்கப்படுகிறதோ? அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாவிட்டால், அது உங்களுடைய நம்பிக்கையை பாதிக்க செய்யும். அது எனக்கும் நடந்து இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது. லோகேஷ் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்க்க மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இளம் வீரரான சுப்மான் கில் திறமையான வீரர். அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவருக்கு வாய்ப்பு கிடைத்து, தொடர்ச்சியாக ரன்கள் சேர்த்தால் நல்ல நம்பிக்கை கிடைக்கும்.

கிரிக்கெட் விளையாடாத சமயத்தில் டோனியை கண்டுபிடிப்பது கடினம். அவர் ரேடாரில் இருந்து மறைந்து விடுவார். யார், யாருக்கு அவரது எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ? அவர்கள் டோனி வசிக்கும் ராஞ்சிக்கு நேரில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். உலக கோப்பை போட்டி தொடருக்கு பிறகு அவரை பற்றி எந்தவித செய்தியும் நான் கேள்விப்படவில்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News