செய்திகள்
ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இவருக்குத்தான் பந்து வீச பயந்தோம்: ஒருசேர கூறும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்

Published On 2020-04-24 14:35 GMT   |   Update On 2020-04-24 14:35 GMT
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக ஜாம்பவான்களாக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் ஒரு பேட்ஸ்மேனை கண்டு அஞ்சி நடுங்கியுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். இருவரும் நீண்ட காலமாக சிறந்த பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் புதுப்பந்தை இருவரும் பங்கிட்டு பந்து வீசினால் எதிரணி பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் எதிர்கொள்வது மிகமிக கடினம்.

ஆனால் இந்த இருவருக்கும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் கிரேம் ஸ்மித் மரண பயத்தை காட்டியுள்ளார். 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சென்று விளையாடும்போது 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவருக்கு பந்து வீசுவது என்றாலே மரண பயம் என்றனர்.

கிரோம் ஸ்மித் குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘கிரேம் ஸ்மித்துதான் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை கண்டுபிடித்தேன். அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து அவருக்கு பந்து வீச ஆசைப்பட்டேன். அவரை டிரைவிங் ஷாட் அடிக்க நான் முயற்சி செய்திருந்தால், அது மாறுபட்டதாக இருந்திருக்கும். ஆனால் ஓவர் தி விக்கெட்டில் இருந்து பந்து வீசியது ஒர்க்அவுட் ஆகவில்லை. அது நம்பிக்கையற்றதாக போனது’’ என்றார்.

‘‘இதே பிரச்சனை முதன்முறையாக அவருக்கு எதிராக 2003-ல் விளையாடும்போது எனக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நான் பந்தை அவுட் ஸ்விங் மட்டுமே செய்வேன். அதாவது வலது கை பேட்ஸ்மேனுக்கு ஸ்டம்பில் இருந்து பந்தை வெளியே கொண்டு செல்வேன். அப்போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு என்னால் அவுட் ஸ்விங் பந்து வீசத் தெரியாது.



நான் அவருடைய வலிமைக்கு தீனியளித்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனது பந்துகளை லெக்-சைடு எளிதாக விளாசினார். 2003 தொடரில் இரண்டு இரட்டை சதம் அடித்தார். அவருக்கு பந்து வீசுவது எளிதான காரியம் அல்ல’’ என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.

கிரேம் ஸ்மித் 117 போட்டிகளில் 27 சதங்களுடன் 9265 ரன்கள் குவித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 151 போட்டிகளில் 584 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 131 போட்டிகளில் 485 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
Tags:    

Similar News