செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான்

ஐபிஎல் போட்டிக்காக ஆசிய கோப்பை அட்டவணையை மாற்ற விடமாட்டோம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

Published On 2020-04-24 13:23 GMT   |   Update On 2020-04-24 13:23 GMT
ஐபிஎல் லீக்குக்காக ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை மாற்ற சம்மதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் தொற்றால் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போனால் அக்டோபர்-நவம்பரில் நடத்தப்படலாம் என்ற கணிப்பு உள்ளது.

உலக கோப்பைக்கு முன் ஆசிய அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் தொடரை நடத்தும் உரிமம் பெற்றுள்ளது.

கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு போட்டிக்கு தயாராகும் நிலை ஏற்பட்டால் ஐபிஎல் போட்டிக்காக ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை எக்காரணம் கொண்டும் மாற்ற விடமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது நிலை. இதில் உறுதியாக இருக்கிறோம். ஒருவேளை கொரோனா தொற்றால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அந்த தேதியில் நடத்தப்பட மாட்டாது. ஐபிஎல் போட்டிக்காக நாங்கள் ஆசிய கோப்பை தேதியை தள்ளி வைக்க சம்மதிக்கமாட்டோம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதத்திற்குச் செல்லலாம் என சிலர் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்த வரைக்கும் அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு நாட்டின் உறுப்பினருக்காக ஆசிய கோப்பையை உங்கள் எண்ணம்போல் மாற்றினால் அது சரியல்ல. அதற்கு எங்களுடைய ஆதரவு இருக்காது’’ என்றார்.
Tags:    

Similar News