செய்திகள்
பண்டேஸ்லிகா கால்பந்து லீக்

ஜெர்மனியில் அடுத்த மாதம் பண்டேஸ்லிகா கால்பந்து லீக்: தயார் நிலையில் அமைப்பாளர்கள்

Published On 2020-04-23 16:16 GMT   |   Update On 2020-04-23 16:16 GMT
ஜெர்மனியில் நம்பர் ஒன் லீக்கான பண்டேஸ்லிகாவை அடுத்த மாதம் நடத்த தயாராக இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் அனைத்து கால்பந்து லீக் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம் நாட்டில் மட்டும் லீக் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மற்ற நாடுகள் ஏதும் அறிவிக்கவில்லை. 

ஐரோப்பியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு போட்டிகளை நடத்தி முடித்திட வேண்டும். இல்லையெனில் சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தது.

பெரும்பாலான நாடுகள் போட்டியை பற்றி நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெறும் பண்டேஸ்லிகா லீக்கின் அமைப்பாளர்கள் மே 9-ந்தேதி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அரசு அனுமதி அளித்தால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என்று பண்டேஸ்லிகா லீக்கின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அனைத்து கிளப்புகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அரசு அனுமதித்தால் கொரோனா தாக்குதலுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவில் அவதிப்படும் நிலையில் ஜெர்மனி மட்டும் அதிக அளவிலான பரிசோதனை போன்ற நடவடிக்கைகளால் ஓரளவிற்கு கட்டுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 91 ஆயிரத்து 612 பேர் குணமடைந்துள்ளனர். 5354 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News