செய்திகள்
பிரெண்டன் மெக்கல்லம்

உலக கோப்பை தள்ளிப்போகும், ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற நம்பிக்கையில் மெக்கல்லம்

Published On 2020-04-23 12:35 GMT   |   Update On 2020-04-23 12:35 GMT
டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டு அந்த நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து சுமார் ஆறு மாத காலத்திற்கு கிரிக்கெட் போட்டி நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்ததுடன் தற்காலிகமாக வேலையில் இருந்து தூக்கியுள்ளது.

மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கியதுடன் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் அவர்கள் நடத்த வேண்டிய போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளன.

ஐசிசி டி20 உலக கோப்பையை நடத்திவிட வேண்டும் என நினைக்கிறது. அதேபோல் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்திவிட விரும்கிறது.

ஒருபக்கம் அவர்கள் நாட்டிற்காக விளையாட இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதம் விளையாடினால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் மட்டுமே ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியை எப்படியும் அக்டோபர் மாதம் நடத்த முயற்சி செய்வார்கள். அதனால் டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளது.

ஐபிஎல் தொடர் நடைபெறாவிடில் வீரர்களுக்கும், ஸ்டாஃப்களுக்கும் சம்பளம் கிடைக்காது. பெண்கள் உலக கோப்பையும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆனால், மூன்று தொடர்களையும் நடத்துவதற்கான வாய்ப்பை பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியா 16 சர்வதேச அணிகளையும், அணிகளின் ஸ்டாஃப்களையும், ஒளிபரப்பு செய்பவர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கப் போகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் யாருமில்லாமல் மூடிய மைதானத்திற்கு நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

2021-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு போட்டிகளை நடத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பை அக்டோபர் - நவம்பரில் ஏற்படுத்த முடியும். சில வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்ல முடியும். ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் இந்தியாவில்தான் உள்ளது. இதனால் ஒருங்கிணைக்க எளிதாக இருக்கும்.

ஐசிசி மற்றும் உலக கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. ஆனால் இந்தியாவுக்கு ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News