செய்திகள்
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும் - சானியா மிர்சா நம்பிக்கை

Published On 2020-04-19 07:05 GMT   |   Update On 2020-04-19 07:05 GMT
அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா ஆன்லைன் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

‘கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் எல்லோருக்கும் கடினமாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஊரடங்கால் மக்கள் மத்தியில் மனிதநேயம் மீண்டும் தளைத்து இருக்கிறது. கொரோனா காரணமாக டென்னிஸ் உள்பட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் மைதானத்துக்குள் நுழையும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தை, வேறு எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாகும். 



அதேநேரத்தில் ரசிகர்கள் இன்றி தான் போட்டி நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது சிறந்ததா? என்பது எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் அனுமதியின்றி காலியாக இருக்கும் ஸ்டேடியத்தில் விளையாட தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. குழந்தை பெற்ற பிறகு டென்னிஸ் போட்டிக்கு திரும்புவதற்காக 2 வருடம் நான் கடினமாக உழைத்து இருக்கிறேன். 

இந்த ஆண்டு டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தேன். அதற்கு தயாராக இல்லையெனில் நான் களம் திரும்பி இருக்க வேண்டிய அவசியமில்லையே?. சொல்லப்போனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போனது எனக்கு லேசான பின்னடைவு தான். ஏனெனில் அடுத்த ஆண்டு எனக்கு மேலும் ஒரு வயது அதிகரித்து விடும். அது சரியான விஷயம் அல்ல. சர்வதேச போட்டிக்கு திரும்பும் போது நல்ல நிலையை எட்ட நேரம் பிடிக்க தான் செய்யும். 

கொரோனா பிரச்சினை ஓய்ந்த பிறகு நான் பழைய நிலைக்கு திரும்ப நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்கு முன்பு விளையாட்டு போட்டிகள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று நம்புகிறேன். நானும் மீண்டும் விளையாட தொடங்கி விடுவேன். அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் என்னால் விளையாட முடியும் என நம்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News