செய்திகள்
எம்எஸ் டோனி

எம்எஸ் டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

Published On 2020-04-12 07:01 IST   |   Update On 2020-04-12 07:01:00 IST
முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் எம்எஸ் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

இதற்கிடையே, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் டோனி சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் ரத்தாகும் சூழல் காணப்படுகிறது. 

இந்நிலையில், எம்எஸ் டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் குரல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, நாசர் உசேன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒருமுறை டோனி ஓய்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக்கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலைமுறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.

நான் டோனியை பார்த்தவரையில் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில ஆட்டங்களில் இலக்கை விரட்டும் போது டோனி சோபிக்கத் தவறியிருக்கலாம். ஆனாலும் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Similar News