செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் விராட் கோலிக்கு அபாயகரமானதாக அமைந்த நியூசிலாந்து தொடர்

Published On 2020-03-02 14:11 GMT   |   Update On 2020-03-02 14:11 GMT
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அபாயகரமானதாக அமைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியடைந்தது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 165 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 191 ரன்களிலும் சுருண்டது. 2-வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன்கள் சேர்த்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். 2-வது இன்னிங்சில் ஒருவர் கூட 30 ரன்னைத் தாண்டவில்லை.

இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடிய தொடரில் இதுவும் ஒன்று. இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரி 18.05 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரின்போது சராசரி 13.37-ம், 1969-70 தொடரில் 16.61-ம் ஆக இருந்தது. அதன்பின் தற்போது மோசமாக விளையாடியுள்ளனர்.

இரண்டு டெஸ்டிலும் ஒரு இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 242 ஆகும். இதற்கு முன் 2002-03 தொடரில் 161 ரன்கள் எடுத்ததுதான் மிகவும் குறைவான ஸ்கோர்.

நியூசிலாந்தின் கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கான ஜோடி அற்புதமாக விளையாடியது. அந்த ஜோடிகளின் சராசரி 34.61 ஆகும். இரண்டு போட்டிகளிலும் ஆறு பார்ட்னர்ஷிப்பில் 205 ரன்கள் அடித்தனர். இரண்டு டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் அவர்கள் அடித்த ரன் முக்கிய பங்காற்றியது.

முதல் டெஸ்டில் கிராண்ட்ஹோம் - ஜாமிசன் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்களும், ஜாமிசன் - போல்ட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 38 ரன்களும் சேர்த்தன. 2-வது டெஸ்டில் ஜாமிசன் - நீல் வாக்னர் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அதேவேளையில் இந்தியாவின் கடைநிலை வீரர்கள் 124 ரன்களே சேர்த்தது. சராசரி 10.33 ஆகும்.

மயாங்க் அகர்வால் அடித்த 58 ரன்களே இந்திய பேட்ஸ்மேன்களின் அதிபட்ச ஸ்கோராகும். 2002-03-க்கும் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சதம் கண்டிராத தொடர் இதுவே ஆகும்.

விராட் கோலியின் (2, 19, 3, 14) சராசரி 9.50 ஆகும். இது அவருக்கு மிகவும் மோசமான 2-வது தொடராகும். இதற்கு முன் 2016-17-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மிகவும் மோசமானதாக அமைந்தது. அப்போது ஐந்து இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்திருந்தார். சராசரி 9.20 ஆகும்.
Tags:    

Similar News