செய்திகள்
ராஜஸ்தான் ராயல்ஸ்

கவுகாத்தியில் இரண்டு போட்டிகளை நடத்துகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2020-02-27 13:00 GMT   |   Update On 2020-02-27 13:00 GMT
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடன் இணக்கமான உறவு இல்லாததால் ஹோம் போட்டிகளில் இரண்டை அசாம் மாநிலம் ஹவுகாத்தியில் நடத்துகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் டி20 லீக்கில் 8 அணிகள் விளையாடுகின்றன. அதில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி அவர்களுடைய ஹோம் மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளியில் சென்று ஏழு போட்டிகளிலும் விளையாடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான சவாய் மான்சிங் மைதானத்தை ஹோம் கிரவுண்டாக கொண்டுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை எனக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவசமாக அதிக டிக்கெட்டுகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நெருக்கடி கொடுப்பதாக தெரிகிறது. இதனால் ஏழு போட்டிகளில் மூன்று அசாம் மாநிலத்தில்  உள்ள கவுகாத்தி பார்சபாரா மைதானத்தில் நடத்த ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் இரண்டு ஹோம் போட்டிகள் கவுகாத்தியில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஏப்ரல் 5-ந்தேதியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏப்ரல் 9-ந்தேதியும் ராஜஸ்தான் ராயல்ஸ் கவுகாத்தியில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 2-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
Tags:    

Similar News