செய்திகள்
எம் எஸ் டோனி

டோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்

Published On 2020-01-28 12:19 GMT   |   Update On 2020-01-28 16:13 GMT
இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்போது யாரும் அமருவது கிடையாது. அவரை அணி மிகவும் இழப்பதாக சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
ஹாமில்டன்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடுகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி நாளை (ஜனவரி 29) ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 3-வது டி20 போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் பஸ் மூலமாக ஹாமில்டன் நகருக்கு சென்றனர். 

வீரர்கள் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சக வீரர்களிடம் கேலி கிண்டலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற ஒரு வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அணி வீரர்கள் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், கோலி உள்பட ஒவ்வொருவருடனும் சாஹல் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.

 

வீடியோவின் இறுதியில் மகேந்திர சிங் தோனி வழக்கமாக அமர்ந்திருக்கும் பஸ்சின் கடைசி ஜன்னலோர இருக்கைக்கு அருகே அமர்ந்த சாஹல், ''இதுதான் 'லெஜெண்ட்’ டோனி பஸ்சில் வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கை. தற்போது இதில் யாரும் அமர்வது கிடையாது. நாங்கள் அவரை மிகவும் இழந்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு டோனி எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. 

மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை காலகட்டத்திற்கான ஒப்பந்த வீரர்கள் (சீனியர் வீரகள்) பட்டியலில் மகேந்திர சிங் டோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News