செய்திகள்
விராட் கோலி

கேப்டன் பதவியில் அதிக ரன்: டோனி சாதனையை கோலி முறியடிக்கிறார்

Published On 2020-01-23 08:14 GMT   |   Update On 2020-01-23 08:14 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை முறியடிக்க இருக்கிறார் விராட் கோலி.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடிக்கிறார். டோனி 20 ஓவர் போட்டியில் கேப்டனாக பணியாற்றி 1112 ரன் எடுத்துள்ளார். அவர் 62 இன்னிங்சில் கேப்டனாக இருந்துள்ளார். விராட் கோலி 32 இன்னிங்சில் கேப்டனாக பணியாற்றி 1032 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.90.

டோனியின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவை. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரின்போது அவர் இந்த சாதனையை முறியடிப்பார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டு பிளிஸ்சிஸ் 20 ஓவரில் கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 40 இன்னிங்சில் 1273 ரன் எடுத்துள்ளார். டோனி 2-வது இடத்திலும், வில்லியம்சன் (நியூசிலாந்து) 1083 ரன்னுடன் 3-வது இடத்திலும், கோலி அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் தொடரின் போது வில்லியம்சனும், கோலியும் முன்னேற்றம் அடைவார்கள்.

20 ஓவர் போட்டியில் விராட் கோலி மொத்தம் 2689 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 2633 ரன்னுடன் 2-வது இடத்திலும், கப்தில் (நியூசிலாந்து) 2436 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மாவை கோலி முந்தினார். இந்த தொடரில் இருவருக்கும் இடையே முன்னிலை பெறுவது தொடர்பாக கடும் போட்டி இருக்கும்.
Tags:    

Similar News