செய்திகள்
சஞ்சு சாம்சன்

முதல் 20 ஓவர் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு? இந்தியா - நியூசிலாந்து நாளை மோதல்

Published On 2020-01-23 07:45 GMT   |   Update On 2020-01-23 07:45 GMT
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆக்லாந்து:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா கடைசியாக ஆடிய ஐந்து 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும் (3-0, 2-1), வங்காளதேசம் (2-1), இலங்கை (2-0) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான தொடரை சமன் (1-1) செய்தது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

அதே நேரத்தில் அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாகஇருக்கும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்ற போது 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர் ஆகியோரும், பந்து வீச்சில் முகமது‌ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ‌ஷர்துல்தாகூர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

விக்கெட் கீப்பரும், இளம் வீரருமான ரி‌ஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ராகுல் கீப்பிங் பணியிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவான் விளையாடாததால் ராகுல் தொடக்க வரிசையில் ஆடுவார். இதனால் மிடில் வரிசையில் ரி‌ஷப்பண்ட் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனீஷ்பாண்டே அவரது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமே. முன்னாள் கேப்டன் டெய்லர், கிராண்ட்ஹோம், காலின்முன்ரோ, குப்தில், பென்னட், சவுத்தி, சான்ட்னர் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 கணக்கில் சொந்த மண்ணில் இழந்தது. இதை இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 12-வது போட்டியாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்தில் இந்தியா 3-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடக்கூடிய நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட்கோலி (கேப்டன்) ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், ஜடேஜா, ஷிசிம்துபே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, சஞ்சுசாம்சன்.

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டாம்புரூஸ், டெய்லர், சான்ட்னா, காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட், சவுத்தி, சோதி, டக்னெர், மிச்சேல், ஸ்காட் குஜ்லின்.
Tags:    

Similar News