செய்திகள்
அபித் அலி, பாபர் அசாம்

பாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா

Published On 2019-12-15 11:55 GMT   |   Update On 2019-12-15 11:55 GMT
மழையால் மூன்று நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி நாளில் பாபர் அசாம், அபித் அலி சதம் அடித்தனர்.
பாகிஸ்தான் மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழைக்காரணமாக முதல் நாளில் 68.1 ஓவர்கள் வீசப்பட்டன. இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் 18.2 ஓவர்களே வீசப்பட்டது.

3-வது நாள் 5.2 ஓவர்களே வீசப்பட்டது. இதனால் போட்டி டிரா என்பது உறுதியானது. இன்று கடைசி நாள் மழை இல்லாததால் ஆட்டம் தொடர்ந்தது. தனஞ்ஜெயா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன்பின் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷான் மசூத் ரன்ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அடுத்து வந்த வந்த கேப்டன் அசார் அலி 36 ரன்கள் சேர்த்தார்.

அப்போது பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு அபித் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருவரும் சதம் அடித்தனர். அபித் அலி 109 ரன்களுடனும், பாபர் அசாம் 102 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக் கொள்வதாக இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

10 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்டின் மூன்று நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் 19-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News