செய்திகள்
5 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்

பெர்த் பகல் இரவு டெஸ்ட் - மிட்செல் ஸ்டார்க் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 166 ரன்னில் சுருண்டது

Published On 2019-12-14 08:18 GMT   |   Update On 2019-12-14 08:18 GMT
ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெர்த்:

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா, லாபஸ்சாக்னேயின் சிறப்பாக ஆட்டத்தால் 146.2 ஓவரில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லாபஸ்சாக்னே 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 56 ரன்னில் வெளியேறினார்.

நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, நீல் வாக்னர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடியது. ஆஸ்திரேலிய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி நியூசிலாந்து வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

அந்த அணியின் ரோஸ் டெய்லர் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். டெய்லர் 80 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 34 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 23 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இறுதியில், நியூசிலாந்து அணி 55.2 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், நாதன் லியான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
Tags:    

Similar News