செய்திகள்
ஜோ பேர்ன்ஸ் போல்டாக்கிய காட்சி

பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

Published On 2019-11-12 13:17 GMT   |   Update On 2019-11-12 13:17 GMT
‘பிங்க் பால்’ பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா ‘ஏ’ 122 ரன்னில் சுருண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணியின் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் அசாம், ஆசாத் ஷபிக் இருவரும் நேற்றைய ரன்களிலேயே ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினர்.

அதன்பின் வந்த இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 53 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 25 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 428 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. பான் கிராஃப்ட் மட்டும் தாக்குப்பிடித்து 49 ரன்கள் அடித்தார்.



7 பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா ‘ஏ’ 122 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் இம்ரான் கான் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

பின்னர் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News