செய்திகள்
தீபக் சாஹர்

மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்

Published On 2019-11-12 12:08 GMT   |   Update On 2019-11-12 12:08 GMT
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நிலையில், இன்றும் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடச் சென்றார். இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் - விதர்பா அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்டது.

விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்தது. 13-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், கடைசி மூன்று பந்திலும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். சாஹர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த விதர்பா 13 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களே எடுத்தது.

தீபக் சாஹர் 3 ஓவரில் 18 ரன்கள விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நேற்று முன்தினம் சர்வதேச 20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட்டு வீழ்த்திய நிலையில் தற்போது இன்று செவ்வாய்க்கிழமை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News