செய்திகள்
ரோகித்சர்மா

பீல்டிங்கில் செய்த தவறால் வாய்ப்பை இழந்தோம்- ரோகித்சர்மா கருத்து

Published On 2019-11-04 10:11 GMT   |   Update On 2019-11-04 10:11 GMT
டெல்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியாவை முதல் முறையாக வங்காள தேசம் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

20 ஓவர் போட்டியில் இந்தியாவை முதல் முறையாக வங்காள தேசம் வீழ்த்தியது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னே எடுக்க முடிந்தது. தவான் 41 ரன்னும், ரி‌ஷப்பண்ட் 27 ரன்னும், ஷிரேயாஸ் அய்யர் 22 ரன்னும் எடுத்தனர். சைபுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். வங்காள தேசம் தரப்பில் 8 வீரர்கள் பந்து வீசினார்கள்.

149 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் வங்காளதேசம் ஆடியது.

அந்த அணி 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் இலக்கை எடுத்தது. வங்காளதேசம் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

முஷ்பிகுர் ரகீம் 43 பந்தில் 60 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), சவுமியா சர்க்கார் 35 பந்தில் 39 ரன்னும் ( 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர், கலீல் அகமது, யசுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக முதல் முறையாக 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. இதற்கு முன்பு நடந்த 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

148 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் மோசமானது. பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் பல வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் ஆவார்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ்.சில் நாங்கள் தவறு செய்து விட்டோம். வங்காள தேசம் அணி பேட்டிங் செய்த போது நெருக்கடி இருந்தது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்.

யசுவேந்திர சாஹல் 20 ஓவர் பேட்டிக்கு ஏற்ற வீரர். அவர் அணிக்கு முக்கியமானவர். எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர் புரிந்து வைத்து இருக்கிறார்.

இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கர்ணல் பாண்ட்யா எல்லை கோட்டில் நின்ற போது முஷ்பிகுர் ரகீம் அடித்த பந்தை எளிதில் கேட்ச் பிடிக்காமல் நழுவ விட்டார். இதே போல் டி.ஆர்.எஸ். முறையை சரியான முறையில் கைமாறி தவறின. இளம் விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் இதில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

Tags:    

Similar News