செய்திகள்
இந்திய பெண்கள் ஹாக்கி அணி

பெண்கள் ஹாக்கி: ஒலிம்பிக் குவாலிபையர் முதல் லெக்கில் அமெரிக்காவை 5-1 என வீழ்த்தியது இந்தியா

Published On 2019-11-01 20:49 IST   |   Update On 2019-11-01 20:49:00 IST
ஒடிசா புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையர் முதல் லெக்கில் அமெரிக்காவை 5-1 என வீழ்த்தியது இந்தியா.
பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையரில் இந்தியா - அமெரிக்கா அணிகள் முதல் லெக்கில் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேர ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. 28-வது நிமிடத்தில் லிலிமா முதல் கோலை பதிவு செய்தார்.

அதன்பின் 3-வது காலிறுதி நேரத்தில் ஷர்மிளா ஒரு கோலும், குர்ஜித் இரண்டு கோல்களும் அடித்தனர். இதனால் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டம் தொடங்கியதும் 46-வது நிமிடத்தில் நவ்நீத் கோல் அடிக்க இந்தியா 5-0 என வலுவான நிலையில் முன்னிலைப் பெற்றது.

ஆறுதலாக அமெரிக்காவின் மேட்சன் 54-வது நிமிடத்தில் கோல் அடிக்க இந்தியா 5-1 என வெற்றி பெற்றது. 2-வது லெக் நாளை நடக்கிறது. இரண்டு லெக்கிலும் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறும்.

Similar News