செய்திகள்
கோப்பையுடன் நட்சத்திர வீரர்கள் நபிபாக்‌ஷ் (பெங்கால்) - நவீன்குமார் (டெல்லி)

புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்?: பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2019-10-19 04:06 GMT   |   Update On 2019-10-19 04:07 GMT
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
ஆமதாபாத்:

7-வது புரோ கபடி லீக் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகள் ஆமதாபாத்தில் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த தபாங் டெல்லி அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை 44-38 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அரையிறுதியில் 15 டேக்கிள்ஸ் புள்ளி எடுத்ததும், ஒரு முறை கூட ஆல்-அவுட் ஆகாததும் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ரைடர் நவீன்குமார் அந்த அணியின் ஆணிவேராக விளங்குகிறார். ‘சூப்பர்10’ எனப்படும் 10 புள்ளிகளுக்கு மேலாக தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் எடுத்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் அவர் ரைடு மூலம் மட்டும் 283 புள்ளிகள் குவித்து இருக்கிறார். கேப்டன் ஜோகிந்தர் நர்வால், சந்திரன் ரஞ்சித், விஜய், ரவீந்தர் பஹால் ஆகியோரும் அந்த அணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்த பெங்கால் வாரியர்ஸ் அணி அரையிறுதியில் மும்பை அணியை 37-35 என்ற புள்ளி கணக்கில் போராடி சாய்த்தது. காயம் காரணமாக கேப்டன் மனீந்தர்சிங் அரையிறுதியில் ஆடாத போதும், கூட்டு முயற்சி வெற்றியை தேடித்தந்தது. மனீந்தர் சிங் இறுதிப்போட்டியில் விளையாடினால் அது பெங்கால் அணிக்கு மேலும் வலுசேர்க்கும். சுகேஷ் ஹெக்டே, பிரபஞ்சன், நபிபாக்‌ஷ், ரிங்கு நர்வால் உள்ளிட்டோர் பெங்கால் அணியில் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள்.

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரண்டு லீக்கில் ஒரு ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் 42-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் தங்களது முதல் பட்டத்துக்காக மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News