செய்திகள்
ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித்

மீண்டும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கேப்டன் பதவி: ரிக்கி பாண்டிங் ஆதரவு

Published On 2019-10-15 13:10 GMT   |   Update On 2019-10-15 13:10 GMT
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக செயல்பட ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த 2018-ல் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது.

இதில் கேப்டனாக பணியாற்றிய ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 379 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஸ்மித் 774 ரன்கள் குவித்து அசத்தினார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

ஸ்மித் மீண்டும் கேப்டனாக பணியாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீண்டும் கேப்டனாக பணியாற்ற முன்னாள் வீரர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரிக்கி பாண்டிங்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் டிம் பெய்ன் எவ்வளவு நாட்கள் விளையாடுவார் என்பதை பொறுத்துதான். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.

வரும் கோடைக்காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக அளவில் ரன்கள் குவித்தால், இன்னும் சில வருடங்கள் விளையாடுவார்.

ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்பாரா? மாட்டாரா? என்பது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டுதான் முடிவு எடுக்க வேண்டும். டிம் பெய்னுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித்திடம்தான் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.

கேப்டன் பொறுப்பில் இன்னும் சில விஷங்கள் முடிக்கப்படாமல் இருப்பதாக ஸ்மித் உணர்வதாக நான் நினைக்கிறேன். ஸ்மித் கேப்டன் பதவியை பெற விரும்பினால், அதுகுறித்து அதிகாரிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News