செய்திகள்
டீம் இந்தியா

புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் அபார வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது

Published On 2019-10-13 09:48 GMT   |   Update On 2019-10-14 16:08 GMT
புனே டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இந்தியாவை விட 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆனது. தென்ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனதோடு நேற்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால், இந்தியா பாலோ-ஆன் எடுக்குமா? அல்லது தொடர்ந்து பேட்டிங் செய்யுமா? என்பது குறித்து தெளிவாக தெரியாமல் இருந்தது.

இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியா பாலோ-ஆன் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது.



முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரிக்க தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News