செய்திகள்
ரோகித் சர்மா

மைதானத்துக்குள் ரசிகர் அத்துமீறல்: பாதுகாவலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்

Published On 2019-10-13 09:26 GMT   |   Update On 2019-10-13 09:26 GMT
புனேயில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்ததற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.

8-வது வரிசை வீரர் முத்துசாமி ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது பிலாண்டர் களத்துக்கு வந்தார். அப்போதுதான் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்தார். அவர் ரோகித் சர்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது ரோகித் சர்மா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதற்கு அந்த ரசிகர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரசிகரை பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர்.

மைதானத்திற்குள் ரசிகர் நுழைந்தது தொடர்பாக பாதுகாவலர்கள் மீது முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்துள்ளார். டெலிவி‌ஷனில் வர்ணனை செய்துக் கொண்டு இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் பாதுகாவலர்கள் ஆட்டத்தை பார்ப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இந்த பிரச்சினை உள்ளது.

கிரிக்கெட் ஆட்டத்தை பாதுகாவலர்கள் இலவசமாக பார்க்கக்கூடாது. ஆட்டத்தை பார்ப்பதற்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட வில்லை. இது போன்று அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.பாதுகாவலர்களின் பக்கம் கேமிராவை திருப்பி அவர்கள் ஆட்டத்தை பார்க்கிறார்களா? அல்லது ரசிகர்களை கவனிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

இதுபோன்று அத்துமீறி நுழையும் ரசிகர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது அலட்சியமாக இருப்பது ஏன்?

மைதானத்துக்குள் நுழைவது எளிதானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏராளமான தடுப்புகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கிறது.

இவவாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியா- தென் ஆப்பி ரிக்கா தொடரில் ரசிகர்கள் அத்து மீறி மைதானத்துக்குள் நுழைவது 3-வது சம்பவமாகும். விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், மொகாலியில நடந்த 20 ஓவர் போட்டியிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Tags:    

Similar News