செய்திகள்
பிலாண்டர், மகாராஜ், ஜடேஜா

புனே டெஸ்ட்: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் சுருட்டியது இந்தியா

Published On 2019-10-12 11:22 GMT   |   Update On 2019-10-12 11:22 GMT
அஸ்வினின் தொடர் முயற்சியால் 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்காவை 275 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது இந்தியா.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

9-வது விக்கெட்டுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார்.



இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆக்குவது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியமாகி விடுமோ? என்ற நிலை இருந்தது. அந்தவேளையில்தான் 102-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்திருந்தது.

மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 42.1 ஓவர்கள் விளையாடி 109 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்களும், முகமது ஷமி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News