செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி கைது

Published On 2019-04-29 23:14 GMT   |   Update On 2019-04-29 23:14 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹானை போலீசார் கைது செய்தனர். #MohammadShami #HasinJahan
அம்ரோஹா:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார். முகமது ஷமி தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சென்றார். முகமது ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து முகமது ஷமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து ஹசின் ஜஹானை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவரை கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. அதன் பிறகு ஹசின் ஜஹான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முகமது ஷமி எனது கணவர். அந்த வீட்டுக்குள் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நான் எப்பொழுது அந்த வீட்டில் தங்க முயற்சித்தாலும், எனது மாமனாரும், மாமியாரும், என்னையும் என் குழந்தையையும் வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்’ என்று தெரிவித்தார். 
Tags:    

Similar News