செய்திகள்
டிராவிஸ் ஹெட், லாபஸ்சேக்னே

பிரிஸ்பேன் டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 323 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது

Published On 2019-01-25 11:34 GMT   |   Update On 2019-01-25 11:34 GMT
பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியா லாபஸ்சேக்னே (81), டிராவிஸ் ஹெட் (84) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்கள் குவித்தது. #AUSvSL
ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

மார்கஸ் ஹாரிஸ் 40 ரன்களுடனும், நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரிஸ் 44 ரன்கள் எடுத்த நிலையிலும், நாதன் லயன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆஸ்திரேலியா 82 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு லாபஸ்சேக்னே உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

ஆனால் அணியின் ஸ்கோர் 248 ரன்களாக இருக்கும்போது லாபஸ்சேக்னே 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.


லக்மல்

டிராவிஸ் ஹெட் 84 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் பேட்டர்சன் 30 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 323 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இன்னும் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
Tags:    

Similar News