செய்திகள்

கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது வங்காள தேசம்

Published On 2018-12-14 14:17 GMT   |   Update On 2018-12-14 14:17 GMT
கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது வங்காள தேசம். #BANvWI
வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் இருந்தது.

இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்களை மெஹிதி ஹசன் சொற்ப ரன்களில் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் தடம் புரண்டது. ஹசன் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

ஷாய் ஹோப் நம்பிக்கையுடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர் லித்தோன் தாஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து தமிம் இக்பால் உடன் சவுமியா சர்கார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சவுமியா சர்கார் 81 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


சதம் அடித்த ஷாய் ஹோப்

அடுத்து தமிம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். தமிம் இக்பால் 81 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 38.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும், மெஹிதி ஹசன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
Tags:    

Similar News